Monday, May 30, 2011

வெள்ளித்திரை

ஆர்ப்பாட்டமான அறிமுக பாடல்
தேவையில்லாத அடுக்குமொழி வசனங்கள்
யதார்த்தத்தை மீறிய சண்டைகாட்சிகள்
இடையிடையே பாடலும் ஆடலும்
மிகப்பெரிய பேனரின் வெளியீடு
என வழக்கமான ஃபார்முலாவோடு
வெளிவரும் மசாலாபடங்களின் மத்தியில்
சத்தமில்லாமல் சாதித்து கொண்டிருக்கும்
நல்ல கதையம்சமுள்ள படங்கள்தான்
எங்களை திரையரங்குகளுக்குள் இழுக்கிறது

Sunday, May 29, 2011

வலி

வீட்டில் திருடியவனை அடிக்கும்போது
மனம் வலிக்கத்தான் செய்கிறது
நாட்டையே கொள்ளையடிக்கும் மந்திரிக்கு
வாகனக் கதவை திறந்துவிட்டு
மரியாதை செய்ததை நினைக்கையில்

Wednesday, May 25, 2011

முயற்சி

படிப்பில் முதல்மதிப்பெண் எடுத்தேன்
விளையாட்டில் முதல்மாணவனாக வந்தேன்
என் நண்பன் ஆச்சர்யப்பட்டான் 
அவனுக்கு தெரியபோவதில்லை 
என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் 
தினமும் நடக்கும் சண்டையில் 
என்னை அவர்கள் கண்டுகொள்வதற்காக 
நான் செய்யும் பிரம்மப்பிரயத்தனம் என்று

Tuesday, May 24, 2011

ஊசல்

நண்பர்களுடன் போட்டியிட பட்டம் செய்து 
வானவில் கலவையில் வர்ணம் தீட்டி 
துடுப்பாக முழநீள வால் ஒட்டி
கைமாறாமலிருக்க நூலில் மாஞ்சா ஏற்றி 
காற்றுக்கேற்ப நுணுக்கமாய் பறக்க விடும்போது 
மனம் சிந்திக்க மறுக்கிறது 
காற்றில் பறக்கும் பட்டத்தின் நூலிழையில் 
ஏதோ ஒருஉயிரின் முடிவு ஊசலாடிக்கொண்டிருப்பதை... 

Monday, May 23, 2011

(ஒற்று)மை

மையிடப்பட்ட பேனாவும் விழிகளும்
மிகவும் தொல்லை தருகிறது
கவிதை படைத்து ரசிக்கச் சொல்லி

Thursday, May 19, 2011

விந்தை

ஜாதி பார்த்து கலக்கும்
திருமணப் பூச்சரத்தில் கூட
பிறர் அறியா வண்ணம்
சில காதல்பூக்கள் மொட்டவிழ்த்து
மணம் சேர்க்கத்தான் செய்கிறது.

Wednesday, May 18, 2011

சுழற்சி

சூரிய கதிரை வெப்பத் தூரிகையாக்கி
புவிநீரை தொய்த்து விண்ணில் தெளித்து
கரிய மேகங்களை சித்திரங்களாய் தீட்டி
மழையை பூமிக்கு கவிதையாய் பிரசவித்து
பசுமைத் தாவரங்களை பெருகிடச் செய்யும்
இயற்கை தாய்க்கு ஈடிணை உண்டோ !

Thursday, May 12, 2011

பதிவுகள்

கடல் அலைகளில் கால்நனைத்து
உன் மடியில் தலைவைத்து
ஓயாமல் பேசும் ஒலியலைகளை
என்மனம் தணிக்கை செய்தாலும்
சுகந்தமான வாசனையால் கிறங்கிப்போய்
தென்றல் தழுவிய உன்அருகாமையில்
காற்றில்படபடக்கும் காகிதமாய் உன்இமைகளும்
நாணத்தால் நிற்காமல்அசையும் கருவிழிகளும்
தலையாட்டல்களுக்கேற்ப அசையும் காதுதொங்கல்களும்
அழகாய் செதுக்கிவைத்த சிறுநாசியும்
இடைவிடாமல்பேசும் உதட்டின் சுழிப்புகளும்
காற்றசைவிற்கு நடனமாடும் கார்கூந்தலும்
ஆஸ்கார் விருது வாங்கிய
பேசும்படங்களாய் என் நினைவலைகளில்

Wednesday, May 11, 2011

புரிதல்

இரவு பகலாய் கண்விழித்து
காதல் கடிதம் தீட்டி
பயத்துடன் அவளிடம் கொடுத்தேன்
பிரித்து பார்த்துவிட்டு முழித்தாள்
அப்போது தான் புரிந்தது
என்உயிராய் நேசிக்கும் தமிழை
அவளுக்கு வாசிக்கவே தெரியாதென்று

தேடல்

இருவருக்கும் தெரிந்த
காதலை பரிமாறிக்கொள்ள
வார்த்தைகளை தேடுகிறோம்
இன்னும் அகப்படவில்லை
நம்முடைய காதலின்
திரையாய் மௌனம்
நம்மைப்பார்த்து சிரித்தபடி

Tuesday, May 10, 2011

அதிர்ஷ்டம்

மழைக்கு யோகம்
குடை எடுத்துவராத
அவள்மீது விழுந்து
அடைந்தது மோட்சம்

Sunday, May 8, 2011

அன்னையர் தினம்

என் கண் பார்த்து
மன ஓட்டங்களை படிப்பாள்
தொலை தூரத்தில் இருந்தாலும்
என்குரல் மூலம் நலமறிவாள்
எனக்காக பல செய்வாள்
என்னிடம் எதுவும் எதிர்பார்த்ததில்லை
நான் உண்பதை பார்த்து
அவள் பசி மறப்பாள்
மலையளவு பிரச்சினை வந்தாலும்
வெற்றிபெற தைரியம் கொடுப்பாள்
அடுத்த ஜென்மம் இருந்தாலும்
உன்மகனாக பிறக்கவே ஆசை
இப்பிறவியில் உன்மகனாக பிறக்க
முன்பிறவியில் என்னதவம் செய்தேனோ
எந்த பதவியில் இருந்தாலும்
குபேர வாழ்க்கையே வாழ்ந்தாலும்
உன் காலடியே என்சொர்க்கம்
அன்னையே நடமாடும் தெய்வமே
அன்னையர் தினமான இன்றும்
என்றும் உனை மறவேன்

Saturday, May 7, 2011

தாயுள்ளம்

முதியோர் இல்லத்தில் விடப்பட்ட தாய்
கோயிலுக்கு சென்று பிரார்தனை செய்தாள்
தன்னை வீட்டிற்கு கூட்டிச்செல்ல வேண்டும்
என்பதற்காக அல்ல
இல்லத்தில் விட்டுவிட்டோமே என்று தன்மகன்
வருத்தப்படக்கூடாது என்பதற்காக

ஐயம்

சாலையோர மரங்களை வெட்டுவதாலா இடித்த நிறுத்த வழியில்லாமல் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

Thursday, May 5, 2011

வேற்றுமையில் ஒற்றுமை

நாத்திகனின் எண்ணங்கள்
ஆத்திகனிலிருந்து வேறுபட்டாலும்
யோசிப்பது என்னவோ
கடவுளை பற்றித்தான்.

மனிதம்

ஒவ்வொரு முறை
ஆம்புலன்ஸ் அலறும்போதும்
நாத்திகம் பேசாமல்
மனம் வேண்டுகிறது
முகம்தெரியாத உயிருக்காக

Wednesday, May 4, 2011

Monday, May 2, 2011

உறுதி மொழி

பந்தயதிற்காக ஒருநாள்
பட்டினி கிடந்தேன்
அன்றிலிருந்து விட்டுவிட்டேன்
உணவை வீணாக்குவதை

காலத்தின் தீர்ப்பு !

நீதி தவறிய கொடுங்கோலராய் மகன்
தவறாக தண்டிக்கப்பட்ட அப்பாவி கைதியாய் தந்தை
மரண சாசனத்தில் இடப்பட்ட கையொப்பம்
கீழுலகத்தில் இருந்து மேலுலகத்திற்கு அல்ல
இல்லத்தில் இருந்து முதியோர் இல்லத்திற்கு
ஆனால் மகனை தந்தையாக்கி முடிவு
தந்தது காலம்.

பாசம்

முத்தம் கொடுத்துக் கொஞ்ச கூட
உடலில் தெம்பு இல்லை
இருந்த உணவை குழந்தைக்குக் கொடுத்துவிட்டு
பசியுடன் பெற்றோர்கள்.

Sunday, May 1, 2011

மே தினம்

வியாபார மயமான உலகம்
பணத்தை துரத்தும் மனிதர்கள்
இவற்றின் மத்தியில்
உழைப்பால் உயர்ந்தோர்கள் அதிகம்
உங்கள் சிந்தையில் நுணுக்கமும்
செயலில் சீரிய வேகமும்
அதிக ஈடுபாட்டுடன் உழைத்து
வாழ்வில் மேலும் உயர்ந்திட
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்